Monday 3 November 2014

இன்பம்


9 ஆம் வகுப்பில் தமிழ்ப்பாடம்.
உவமைக்கவிஞர் சுரதா எழுதிய 'இன்பம்' என்ற பாடலை நடத்தவேண்டும்.
ஏற்கனவே நான் இல்லாதபோது பயிற்சியாசிரியை நடத்திமுடித்திருந்தார்.
இருந்தாலும் மறுபடியும் நடத்தலாம் என்று நான் தொடங்கினேன்.
இன்பம் என்றால் என்ன?
என்ற கேள்வியோடு உரையாடலைத்தொடங்கினேன்.
மகிழ்ச்சி, ஆசை, விருப்பம் என்று ஆளுக்கொன்றாகச்சொன்னார்கள்.
எனக்கொரு யோசனை தோன்றியது.
ஆளுக்கொரு தாளை எடுத்து,
அவரவருக்கு இன்பம் தருபவற்றை எழுதச்சொன்னேன்.
நிறைய எழுதினார்கள்.
பயிற்சியாசிரியையிடம் அனைவரும் எழுதியதை கொடுத்து
வாசித்தபின் என்னிடம் தரச்சொன்னேன்.
மதியவேளையில் என்னிடம் அனைத்து தாள்களும் வந்துசேர்ந்தன. வாசித்துப்பார்த்தேன்.
கூட்டுக்குடும்பம்,பணம், நடிகர்,உணவு,விடுமுறை, என்று பலப்பல இன்பங்களுக்கு இடையே ஒரு சிலர்,
காதலியுடன் சினிமா செல்லுதல் இன்பம் , உணவகம் போவது இன்பம் என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

இவற்றையெல்லாம் வாசித்த பயிற்சியாசிரியை என்ன அதிர்ச்சியை சந்தித்திருப்பார்? என்று எண்ணிப்பார்த்தேன். நாளை கேட்கவேண்டும்.
இப்படி, மாணவர்களை எழுதத்தூண்டியது எது?
எனது வகுப்புகள் பல்வேறு உரையாடல்களின் களமாக இருந்திருக்கின்றன. நான் கொடுத்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருகிறதா?
மாணவர்களின் குடும்பச்சூழல் என்ன? விடலைப்பருவத்தில் இருக்கும் இவர்களுக்கு என்ன செய்திகளை சொல்லவேண்டும்?
என்று பலவாறு யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

எது இன்பம்?
மாணவர்கள் இன்பம் குறித்து எழுதிக்கொடுத்திருந்த தாள்களுடன் இன்றைய வகுப்பிற்குச்சென்றேன்.
காதல் குறித்து எழுதியிருந்தவர்களின் பெயர்களை மட்டும் சொல்லி யார் என்று பார்த்துக்கொண்டேன்.
பேசத்தொடங்கினேன்.
" நீங்கள் அனைவரும் பல்வேறு இன்பங்களை பட்டியலிட்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. இப்போது நான் சொன்ன பெயர்கள் நன்றாக எழுதியவர்கள் என்று அர்த்தமில்லை.
சிலர் காதலியுடன் செல்வது பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்."
மாணவரிடையே சலசலப்பு.மகிழ்ச்சி.
" உங்கள் வயதும்,சுற்றுப்புறமும் அப்படி. சினிமாவும் அப்படித்தான் இருக்கிறது. உங்களுக்கு முன்னாள் இந்த வயதைக்கடந்து வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். அவர்களிடம் இதுபற்றிக்கேட்டால் சரியான விளக்கங்கள் சொல்லக்கூடும். பள்ளியில் ஆசிரியர்களும் சொல்லலாம். இது குறித்து அறிவுப்பூர்வமாக ஒருநாள் விவாதிப்போம்."
" ஏற்கனவே, படித்து முன்னேறியவர்கள் பலரின் கதைகளை உங்களுக்குச்சொல்லியிருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். நன்கு படித்து அறிவால் முன்னேறியவன், அவனுக்குப்பின் வரும் தலைமுறையை அறிவுடையதாக மாற்றுகிறான். உங்கள் தந்தையை விட நீங்கள் முன்னேறும்போது உங்கள் தலைமுறையே மாறும்."

உங்கள் பட்டியலில் பெரும்பாலும் ஆசையே அதிகம் இருக்கிறது.
ஆசை வேறு, இன்பம் வேறு.
ஆசை, அளவுக்கு மீறும்போது துன்பம் தரும்.
இன்பம், அளவுகடந்தாலும் இன்பமே தரும்.
லட்டு வேண்டும்.என்பது ஆசை. அளவுக்கு மீறினால் துன்பம்.
தாயின் முத்தம் இன்பம். எவ்வளவு கிடைத்தாலும் இன்பம்.
கவிஞர் சுரதா பட்டியலிடும் இன்பங்களை இப்போது பார்ப்போம்.
பாடம் தொடர்ந்தது.
மாணவர்கள் பல்வேறு சூழல்களில் இருந்து வருகிறார்கள்.
சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை. யாராவது கேட்பார்கள்.
ஒருநாள் அவர்கள் புத்திக்கு எட்டும்- என்று பயிற்சியாசிரியையிடம் சொன்னேன்.

No comments:

Post a Comment