Sunday 10 August 2014

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே.


சேரநாடு செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.காரணம்,குறிஞ்சி நிலம்.
மலையகப்பகுதிகளின் மேல் மனதுக்கு இனம்புரியா ஈர்ப்பு.
தனியே நடந்து ஊரைச்சுற்றுவது பிடித்தமான ஒன்று.
திருவனந்தபுரத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கிறேன்.
காலை நேரம்.
வேலைநாளுக்குரிய பரபரப்பை மெதுவாகப்போர்த்திக்கொள்ள ஆரம்பித்திருந்தது நகரம்.
பழமையைப்பிடிவாதமாகப்பிடித்துக்கொண்டிருக்கும் நகரம்.
மழைக்காலம் என்பதால் கூடுதல் ஈரமும் குளிரும்.
தண்ணீர் தேங்காத நில அமைப்பு.
மனிதனின் பாதம் படாத இடமெல்லாம், பாறைகள் உட்படப்பசுமை.
நவ நாகரீக உடையணிந்த இளைஞர் கூட்டத்திலும் ஓரிருவர் வேட்டியுடனிருப்பது சாதாரணம்.
வழியே ஒரு பேருந்து நிறுத்தம்.
நிறையப்பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அனிச்சையாய் தலைகுனிந்து கடக்கையில் பேருந்தின் ஒலி. திடுக்கிட்டுத்தலை நிமிர்ந்தேன்.
என் பின்னே பேருந்து, பெண்களனைவரும் பேருந்தைப்பார்க்க நான் அவர்களைப்பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறைய முகங்கள். ஒரு கணம் அப்படியே மெய்மறந்து நிற்க, எண்ணத்தில்,
எங்கெங்கு காணினும் சக்தியடா
எழுகடல் அவள் வண்ணமடா......
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே..
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை....
என்று பாரதியின் வரிகள் மின்னலிட்டன.
நிஜத்தை நொடிகளில் கடந்துவிட்டேன்.
நினைவு நிறுத்திக்கொண்டது.
ஆமாம், பாரதி ஊர் சுற்றி. கண்டிப்பாகச்சேரநாடும் சுற்றியிருப்பான். இல்லையென்றால் இப்படியொரு வரியைப்பாடுவது சுலபமல்ல.
சேர நன்னாட்டிளம் பெண்கள் என்றால் உடலமைப்பல்ல, முகத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
அதுதான் தெய்வீகம்.
நெளிந்த முடி,தளர்ந்த கூந்தல், மாநிறம், செதுக்கிய நாசி, தீற்றலாய்ச்சந்தனம்,
ஞானச்செருக்கு.

ஓர வகிடுக்கு சற்றே கூடுதல் அழகு.
அந்த முகங்களைத்தரிசித்த பரவச நிலை நெடுநேரம் நிலைத்திருந்தது.
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே தோணிகளோட்டி விளையாடிக்கொண்டிருந்தேன்.
பாரதி மாகாகவி.


ஓவியம்....ரவி.

ஓவியக்காட்சி.


திருவனந்தபுரத்தில் 6ஆம் தேதிமுதல் 14 ஆம் தேதி வரை
ஓவியக்காட்சி.

நண்பர் மணிலால் Anokhii என்ற அமைப்பு மூலம் ஓவியக்காட்சிகளை நடத்திவருகிறார். திருவனந்தபுரம், கலாச்சார வளாகத்திலுள்ள கேரள லலித்கலா அகாடமி அரங்கில் கண்காட்சி நடைபெறுகிறது.
இரு ஓவியங்களுடன் சென்றிருந்தேன்.புனே, மும்பை,துபாய்,
ஹைதராபாத் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஓவியர்கள் வந்திருந்தனர்.
6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.பி.அனில் குமார் கண்காட்சியைத்திறந்துவைக்க வருவார் என்றார்கள்.
ஓவியர்கள், பார்வையாளர்கள்,சில பத்திரிகையாளர்கள் லலித்கலா அகாடமி செயலர் அனைவரும் தயாராக இருக்க சரியாக 5 மணிக்கு ஒரு கார் மட்டுமே வந்தது.ஒருவர் மட்டுமே வந்தார். அமைச்சர் என்றார்கள். சுற்றிப்பார்த்தார்.ஓவியர்களை விசாரித்தார். பேசினார்.
கிளம்பிவிட்டார். அனைவருமே ஓவியம் பற்றியே பேசினார்கள்.
இரவுணவு நண்பர் சதீசனுடன்.
அங்கேயே தங்கியிருந்தேன்.நள்ளிரவுவரை அனைவரும் பேசிக்கொண்டிருந்தது சுகமான அனுபவம். கேரளாவின் கன்னூரிலிருந்து பல ஓவியர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் என்மேல் அளவு கடந்த அன்பு, நான் தமிழன் என்பதால்.
மூத்த ஓவியர் கே.கே.ஆர் .,மலையாளத்தில் நீண்டநேரம் பேசிக்கொண்டே இருந்தார்.
"திருவள்ளுவர், மானுடம் பாடியவர், அந்தக்காலத்தில் அவ்வளவு அற்புதமான சிந்தனைகளைத்தந்தது தமிழ் மட்டுமே. அன்று முதல் அண்ணாதுரை வரை பரவாயில்லை. அதன் பின் தமிழரின் சிந்தனை வளர்ச்சியில் சற்றே சரிவுதான்"
தி,ஜ.ரா வின் மோகமுள், சித்திரப்பாவை, இளையராஜா, தெய்யம் நாட்டியம், திரைக்கு வந்த மரபுப்பாடல்கள் என்று அவரின் விரிவான பேச்சில் மயங்கியிருந்தேன்.
கன்னூர் ஓவியர்கள் பலர் எனக்கு இளையராஜாவின் பாடல்களைப்பாடிக்காட்டிக்கொண்டே இருந்தனர். மலையாளக்கட்டைக்குரலில் கொஞ்சுதமிழ் வார்த்தைகள் தாலாட்டின.

உருவமற்ற ஓவியம்.


பெரும்பாலான எனது ஓவியங்கள், கருப்பு வெள்ளையிலேயே.
கருப்பு வண்ணத்தோடு எனது உதடுகள் காற்றை ஊதி விளையாடும்போது மற்ற வண்ணங்கள் சற்றுப்பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்கும்.
பொறுமையிழந்த வேளையில் என்னோடு மெதுவாக சண்டை தொடங்கும்.
அவற்றின் புலம்பல்களைக்கண்டும் காணாததுபோல கறுப்போடு விளையாடிக்கொண்டிருப்பேன்.
பொறுமையிழக்கும் ஒரு புள்ளியில் புதிய வெள்ளைக்கித்தானில் எல்லா வண்ணங்களோடும் போலிக்கோபமாக கைகளும் தூரிகையும் உறவாடுகையில் உணர்ச்சியின் உருவமாக உருவமற்ற ஓவியம் உருவாகும்.

பொட்டி வந்தாச்சு!



9 ஆம் வகுப்பு மாணவர்கள் முற்றிலுமாக வாசிப்பின் மாயத்திற்கு வசப்பட்டுவிட்டார்கள்.
வகுப்பிற்கு எப்போதும் பெட்டியுடனே செல்வேன். பெட்டி நிறையப்புத்தகங்கள்.
உள்ளே நுழைந்ததும் பெட்டியை வாங்கி புத்தகங்களை வரிசையாக வைத்துவிடுவார்கள்.
ஒரு புத்தகத்தை எடுக்கும்போது குறிப்பேட்டில் குறித்து வைத்துவிடவேண்டும்.
வாசித்துமுடித்தபின் சிறு விமர்சனம் அல்லது குறிப்புடன் வேறு புத்தகம் எடுத்துக்கொள்ளலாம்.
இவற்றில் பெரும்பாலானவை இப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள்.
காமிக்ஸ், குட்டி இளவரசன்,ஆயிஷா, தெனாலிராமன், சூபி கதைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் எனப்பல்வேறுவகையான புத்தகங்கள் இருக்கின்றன.
இதே பெட்டி முற்றிலும் காமிக்ஸ் புத்தகங்களுடன் 6 ஆம் வகுப்பிற்கும் செல்கிறது.

வர்க்கலா - கேரளாவில் மலைமுகடும் கடலும் சந்திக்கும் சுற்றுலாத்தலம்.
இயற்கை மட்டுமே இருக்கிறது.
பாரம்பரிய வடிவமைப்பில் தங்குமிடங்கள்.
இனிமையான உபசரிப்பு.
ஆயுர்வேதம்,கிழி,பிழிச்சில்.
சமையல் வகுப்பு.
யோகா வகுப்பு.
திறந்தவெளிக்கழிப்பறை.
நீர் விளையாட்டுகள்.
கடல் உணவுகள். படகு வீடு......
நம்மையறியாமலேயே செலவு செய்கிறோம்.
உலகெங்கிலுமிருந்து வந்து செலவு செய்கிறார்கள்.
இயற்கையே தெய்வம்.
கேரளா, கடவுளின் சொந்தநாடு.

மதுரை- 2000 ஆண்டுகளாகவே நகரம்.
வரலாற்றுச்சிறப்புமிக்கது.
தீப்பெட்டி போன்ற தங்குமிடங்கள்.
வழிகாட்ட ஆளில்லாமல் தவிக்கும் பயணிகள்.
நாயக்கர் கோட்டைக்கொத்தளம்,
மிகச்சிறப்பான பூங்காவாக வடிவமைக்கப்பட்டபின் வேலையற்றவர்களின் ஓய்விடமாகிக்கிடக்கிறது.
மலைகளில்,குகைகளில்,தெருக்களில்,
எங்கெங்கு காணினும் கொட்டிக்கிடக்கும் குப்பைகளுக்குப்பின்னே
உறைந்து கிடக்கிறது,
தமிழின்,தமிழரின் வரலாறு.
உலகெங்குமிருந்து வந்து மூச்சுத்திணறுகிறார்கள்.
மதுரை,தமிழின் சொந்தநாட
ு.

6 அடிக்கு 6 அடி. அரச அளவுக்கட்டில்.
1 அடி உயர மெத்து மெத்தென்ற மெத்தை.
எவ்வளவு இடமிருந்தாலும் எத்தி எத்தியே கட்டிலின் விளிம்பில்
இப்பவோ அப்பவோ என்று விழுந்து விடாமல் சாகசமாக என்னை உறங்கப்பழக்கியிருக்கும் பிள்ளைகள்.
ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு.
ஆளுக்கொரு அறை .
விதவிதமான வடிவமைப்புகள்.
எல்லாமே,எல்லாமே,
இங்கிருந்துதான் தொடங்கின.
நம் மூதாதை தன் குடும்பத்தைக்குறுக்கி அடைத்துக்கொண்டு
என்னவெல்லாம் எண்ணியிருப்பான்?
உள்ளே உட்கார்ந்திருந்த மணித்துளிகளில்
பெருமிதத்தில் பூத்தன விழித்துளிகள்.

வேர்களைத்தேடி.



INTACH தமிழ்நாடு மற்றும் FRIENDS OF HERITAGE SITES அமைப்பும் இணைந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்காக ஒருநாள் கலை,பண்பாட்டுக்கல்விச்கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தன. கொடைக்கானல் அருகிலுள்ள தாண்டிக்குடி மலைப்பகுதிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாவுக்கான வேன் மற்றும் உணவு அனைத்துமே அவர்களின் பொறுப்பு.தோழி திருமதி.ஷர்மிளா,கலை வரலாற்றாளர் நண்பர் காந்திராஜன் இருவருமே இதைச்சாத்தியமாக்கியவர்கள்.
8 முதல் 12 ஆம் வகுப்புவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாணவர்களை அழைத்துக்கொண்டு நானும் ரமணனும் சென்றோம்.உடன் காந்திராஜனும்.
கல்வி வளர்ச்சி நாளன்று காலை பள்ளியில் தொடங்கிய எங்களின் பயணம் மதிய உணவோடு தாண்டிக்குடி முருகன் கோவிலில் தொடங்கியது.
 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கைகள்.
நல்ல நிலையில் ஒன்றுமட்டுமே இருக்கிறது. பல சிதைந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன் நான் குடும்பத்துடன் சென்றபோது நிறைய பார்த்திருந்தேன்.
புதிய கற்காலத்திக்குப்பின் மனிதன் வீடு கட்டத்தொடங்கியதன் முதல் படி.
பல்வேறு செய்திகளை காந்திராஜன் சொல்லிக்கொண்டே இருந்தார். மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களைக்கேட்டனர்.
8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கேட்ட கேள்வி காந்திராஜனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அது, கடைசியில் சொல்கிறேன்.

அங்கிருந்து நடந்து பழங்குடி மக்களான பளியர் குடியிருப்பை அடைந்தோம். புல்லும் கூரையும் வேய்ந்த அழகிய வீடுகள்.
மின்சாரம் இல்லை. சிறிய சூரிய மின் தகடுகளை அரசு வழங்கியுள்ளது. வானொலி இசைக்கிறது.

கற்களை அடுக்கி,கம்புகள்,குச்சிகள் கட்டி இடையே சிறு கற்கள் வைத்துக்களிமண் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட வீடுகள்.
நீண்ட நேரம் அங்கே இருந்தோம். எளிய இனிமையான மக்கள்.
இங்கே வந்து ஓரிரு நாட்கள் தங்கலாமா? என்று கேட்டோம்.
வசதிகள் எதுவுமில்லை.நீங்கள் விரும்பினால் தாராளமாய் வரலாம்.
விரைவில் நானும் ரமணனும் செல்லலாமென முடிவு செய்தோம்.


அங்கிருந்து உசிலம்பட்டி அருகிலுள்ள ஆனையூரில் உள்ள சிவன் கோவில்.

12 ஆம் நூற்றாண்டைச்சார்ந்தது. தூண்களின் அமைப்பு,கோபுரம்,சிற்பங்கள் எனப்பல்வேறு செய்திகள் மாணவர்களுக்கும் எங்களுக்கும். சொல்லிக்கொண்டே இருந்தார் காந்திராஜன்.

அங்கிருந்த கண்மாயில் அமைக்கப்பட்டிருந்த பாண்டியர்கால மதகையும் பார்த்து வியந்தோம்.

இப்பயணத்தின் தொடர்ச்சியாகப்பல நிகழ்வுகளை முடிவு செய்துகொண்டு திரும்பினோம்.
வழியெங்கும்,
என்னங்க,ஒரு சின்னப்பையன்,இப்படிக்கேக்குறான்,
மீடியா,எப்புடி கெடுத்துருக்கு பாருங்க...
என்று புலம்பிக்கொண்டே வந்தார் காந்திராஜன்.
அந்த 8 ஆம் வகுப்பு மாணவன் கேட்ட கேள்வி,
"சார், இப்படி பழமையான பொருட்களைத் தேடி எடுத்துட்டுப்போனா நெறையக்காசுக்கு விக்கலாமாமே?"