Saturday 21 June 2014

ஏண்டா, சாமி என்னப்படைச்சே

கல்வியாண்டின் முதல்நாள் மாலை. பள்ளிச்செயலரின் கூட்டம் 6 மணியைத்தாண்டி நடைபெற்றிருந்தது. 6 ஆம் வகுப்பு தமிழ் வழிக்கு 23 மாணவர்களே சேர்ந்திருந்தனர். மாணவர் சேர்க்கை வெகுவாகக்குறைந்திருப்பது குறித்துததனது வருத்தத்தைப்பதிவு செய்திருந்தார். நிறைய பேர் படித்த பள்ளி.கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை எப்படிக்குறைகிறது? என்று யோசியுங்கள் என்றார்.நான் சில காரணங்களைச்சொன்னேன்.வழக்கம்போல அனைவரும் அமைதியாக இருந்தனர். வெளிய வந்த பின்னாடி...
அடா..அடா...அடா....

மறுநாள் காலை,தலைமையாசிரியர் அறையைக் கடக்கும்போது பார்க்கிறேன். ஒரு சிறுவனுடன் நடுத்தர வயதுக்காரர் தலைமையாசிரியர் மற்றும் உதவித்தலைமையாசிரியர் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்.
"பின்னாடி பிரச்சினையாயிரும் இப்பவே போயி மாத்திட்டு வந்திருங்க" என்று இருவரும் மீண்டும் மீண்டும் சொல்ல, சிறுவனுடன் வந்தவர், விழித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
என்ன என்றேன்.
மாற்றுச்சான்றிதழில் 14 என்று பிறந்த தேதியை எழுதும்போது லேசாக இழுத்து இருக்கிறது.
எங்கள் தலைமையாசிரியர் அந்தஇடத்தில் திருத்தி, சிறு ஒப்பம் வாங்கி வரச்சொல்கிறார்.
வந்தவர் 18 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்.அவருக்கு எதுவுமே புரியவில்லை.
"லேசாதானே இழுத்திருக்கு" என்கிறார்.

சேர்க்கை விண்ணப்பம் எழுதும் ஆசிரியரிடம் முதலில் விண்ணப்பம் எழுதச்சொன்னேன்.
தலைமையாசிரியரிடம்,


"சார்,இப்பல்லாம் எந்த ஆவணமும் கேட்க வேண்டிய அவசியம் இல்ல, பின்னாடி பாத்துக்கலாம்,அவரு பாவம் கிராமத்துல இருந்து வந்திருக்காரு.ஏற்கனவே பசங்க இல்லாம கஷ்டப்படுறோம்.இப்ப போயி திருத்திட்டு வரச்சொன்னா..அப்படியே போயி வேற ஸ்கூல்ல
சேத்துட்டுப்போயிடுவாரு"
பையனின் தந்தையிடமும்,
இப்ப,இருக்கட்டும் ஆபீஸ்ல கேட்டுட்டு மாத்தணும்னு சொன்னாங்கன்னா அப்பறமா சொல்லி அனுப்புறோம்,அப்ப மாத்திக்கலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டுப்பையனை வகுப்பிற்கு அழைத்துச்சென்றேன்.
பாடவேளை தொடங்கிப்பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.அறிவியல் ஆசிரியர் அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
மாணவர்கள் கத்திக்கொண்டிருக்க,சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
"புதுப்பையன்" என்றேன்.
திரும்பினார்.திரும்பிக்கொண்டார்.

மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்,
'ஏண்டா, சாமி என்னப்படைச்சே....
என்னைப்படைக்கையிலே, என்ன நெனைச்சே?'

No comments:

Post a Comment