Saturday 31 May 2014

ஆசிரியர்கள் கூட்டம்

இன்று காலை ஆசிரியர்கள் கூட்டம். அதீத உற்சாகத்துடன் சென்றேன். சிலர் வரவேயில்லை. தலைமையாசிரியர், கூட்டம் தொடங்கியபோது திட்ட ஆரம்பித்தவர் முடியும்வரை திட்டிக்கொண்டே இருந்தார்.
பத்தாம் வகுப்பு முடிவுகளைப்பற்றியதாகவே அவரின் பேச்சுக்கள் இருந்தது.தமிழில் கூட மதிப்பெண் எடுக்கவைக்க முடியவில்லையே? சம்பளம் மட்டும் வாங்குகிறோம்?
என்னென்னவோ பேசினார்.வழக்கம் போல பொதுவாகவே திட்டிக்கொண்டிருந்தார்.
நானும் வேலைக்கு வந்த 18 ஆண்டுகளாகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன்,

ஆசிரியர்கள் கூட்டம் என்றாலே தலைமையாசிரியர் மட்டுமே பேசுவார்.மற்றவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பர்.சிலர் தலையாட்டுவார்கள்.
ஏதோ இரங்கல் கூட்டம் போலவே இருக்கும். யாராவது எழுந்து கேள்வி கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நானும் நண்பர்களிடம் கேட்பதுண்டு. உனக்கு ஏன் வேண்டாத வேலை? என்பார்கள்.
ஆனால், ஆசிரியர் அறையில் பேச்சுக்கள் பொறி பறக்கும்.
 ஒரு பிரச்சினை குறித்து யாருமே விவாதிக்க விரும்புவதே இல்லை. பொதுவாகச்சத்தம் போட்டால் போதும்.
ஏன்,ஒவ்வொருவராக காரணங்கள் குறித்து ஆராயக்கூடாது?
அதிகாரிகள்,தலைமையாசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
ஆண்டுத்தொடக்கமே அமர்க்களம்.

மனம் நிறைந்த மாணவன் - 2


ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஓவிய வகுப்புகளில் படம் வரைவது தவிர உலக ஓவியர்கள், ஓவியங்கள், வரலாறு, இலக்கியம், திரைப்படம் எனப்பல செய்திகள் குறித்து மாணவரிடையே பேசிக்கொண்டிருப்பதுண்டு.
ஒரு நாள் 9 ஆம் வகுப்பில் மொகலாய பேரரசர்களைப்பற்றிப்பேச ஆரம்பித்தேன்.
சிலரின் பெயர்களைச்சொல்ல மறந்து நான் திணறியபோது யாரோ ஒரு மாணவன் சரியாகச்சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஆச்சரியம்.
பாடத்துல இருக்காடா?
இல்ல சார்....
யார்றா, அது?
இவந்தான் சார்,
மெதுவாக, தலைகுனிந்தபடி எழுந்தவனைப்பார்த்தேன். மிகுந்த ஆச்சசரியமாக இருந்தது, கௌதம்.
அவனை நான் முதன்முதலில் அவன் அப்பாவுடன் பார்த்திருக்கிறேன். அவனை ஓவிய அறைக்கு அழைத்து வந்து இரண்டு ஓவிய ஆசிரியர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தபின் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,
"சார், இவனுக்கு சின்ன வயசுல மூளைக்காய்ச்சல் வந்து ரொம்பக்கஷ்டப்பட்டான். அதுனால, படிக்குறதுல குறைபாடு இருக்கு. படம் வரைஞ்சா நல்லதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.கொஞ்சம் பாத்துக்கோங்க."
என்று சொல்லிச்சென்றிருந்தார். ஆனால், என்னவோ, சிலநாட்களில் அவன் ஓவிய அறைப்பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டான்.
வகுப்பில் இப்போது கௌதமை பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து கேட்டேன்.
உனக்கு எப்படி எல்லா பேரும் தெரியும்?
பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துவந்து காட்டினான்.
மொகலாயர் வரலாறு குறித்த புத்தகம். மாவட்ட மைய நூலகத்தில் எடுக்கப்பட்டது.
யாருகிட்ட வாங்கின?
நான்தான் எடுத்தேன். மெம்பரா இருக்கேன்.
இந்தப்புத்தகத்த எப்படி எடுத்த?
எனக்கு வரலாறு பிடிக்கும்.
ஒரு நோட்டில் அனைத்து மொகலாய பேரரசர்களின் படங்களையும் வரைந்திருந்தான்.
இந்த நிகழ்விற்குப்பின் கௌதம் வாசிப்பதற்கு பல புத்தகங்களை நானும் பரிந்துரைத்தேன். பத்தாம் வகுப்பில் தவறியபின் அவனைப்பார்ப்பது குறைந்துபோனது.
ஒவ்வொன்றாக எழுதி பத்தாம் வகுப்பில் தேறினான். சென்னை சென்று கிராபிக்ஸ் தொடர்பான படிப்புகளைப்படித்தான். எப்போதாவது கௌதமிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வரும்.திரைப்படம்,புத்தகம் குறித்துப்பேசுவான். கண்டிப்பாக சென்னை புத்தகக்கண்காட்சியின்போது பேசுவான்.மதுரை வரும்போது வீட்டுக்கு வருவான்.
இப்போது கௌதம் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆண்டுக்கு ஒருமுறையேனும், சென்னை புத்தகக்கண்காட்சியின்போது கௌதமிடமிருந்து செல்பேசி அழைக்கும்.

சிகரெட் குடிகாரன்.


பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது விடுமுறைக்காலங்களில் திரைப்படங்களுக்குச்செல்லும் போது இடைவேளை நேரத்தில் சிகரெட் பிடிப்பதுண்டு. அதுவும் 'மோர்' என்ற பெயரில் பழுப்பு வண்ணத்தில் ஒல்லியாக,நீளமாக இருக்கும் அயல்நாட்டு சிகரெட். கூட்டமாக இருக்குமிடத்தில் பற்றவைப்பேன். எல்லோரின் பார்வையும் என் மேலேயே இருக்கும். அதிலொரு பெருமிதம்.
+2 க்குப்பின் ஓர் சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றியபோது 'கிங்க்ஸ்' பிடிக்க ஆரம்பித்தேன்.
சிகரெட் பிடிக்கும்போது என்னிடம் இருந்த ஒரு பழக்கம், பற்ற வைத்ததிலிருந்து கடைசிவரை ஒவ்வொரு முறையும் புகையை உள்ளே இழுத்து விடுவது முதலான அனைத்தையும் நன்கு கவனிப்பது.
இது நமக்குள் என்ன மாற்றத்தைச்செய்கிறது என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ஓஷோவின் புத்தகங்களைப்படித்ததாலும் என் இயல்பாலும் வந்தபழக்கம் இது.பெரும்பாலும் என்னசெய்தாலும் 'இது என்ன செய்கிறது?' என்று கவனித்துக்கொண்டே இருப்பேன்.
அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிகரெட் பிடித்திருப்பேன்.அதன் பின் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.இயல்பாகவே என்னைவிட்டு எப்படிச்சென்றது என்று தெரியாமலேயே சென்றுவிட்டது.

மனம் நிறைந்த மாணவன் - 1

நீண்ட நாட்களாகவே ஒருமுறையேனும் வீட்டிற்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்தான் தங்கப்பாண்டி.
தங்கப்பாண்டி, எங்கள் பள்ளியில் படித்த மாணவன்.+2 க்குப்பின் அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து கிராமியக்கலைகள் பயின்றவன்.
எங்கள் பள்ளியில் படிக்கும்போது கிராமிய நடனப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டான். மிகவும் சிரமப்பட்டே நடனம் அவனுக்கு வசப்பட ஆரம்பித்தது.
தனது நண்பர்களை இணைத்துத்தனக்கென ஓர் கிராமியக் கலைக்குழுவை உருவாக்கிக்கொண்டான்.
கிராமியக்கலை நிகழ்சிகளுக்குச் செல்வது, மற்றநேரங்களில் கட்டிடவேளைகளுக்குச்செல்வது என நகர்கிறது வாழ்க்கை.
இரவு நேரத்தில் தங்கப்பாண்டியின் வீட்டிற்கு நண்பர் ஓவியர் ரவியுடன் சென்றேன்.


நன்கு குனிந்து நுழையுமளவு தாழ்ந்த வாசல்,ஒற்றை அறையுடன் ஓட்டு வீடு. குறுக்குச்சட்டம் முழுவதும் மெடல்கள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
அறையெங்கும் பரிசுப்பொருட்களும்,கிராமிய நடனங்களுக்குத் தேவையான பொருட்களும்.
வீட்டிலிருந்து ஊருக்கு வெளியே வந்தோம்.
வயல்வெளிகள்,வீட்டு மனைகளாக மாறியிருக்கின்றன. ஆங்காங்கே வீடுகள்.தனித்த ஒரு வீட்டின் மேலெரிந்துகொண்டிருந்த குழல் விளக்கொளியில் சிறார்கள்.
வேலைகளுக்குச்சென்று வந்தபின் தனது பகுதியில் வசிக்கும் சிறார்களுக்குஇரவு நேரத்தில் பல்வேறு கிராமியக்கலைகளைச் சொல்லித்தருகிறார் தங்கப்பாண்டி.
ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,

கட்டைக்கால்  ஆட்டம்,தப்பாட்டம்,கரகம்,கபடி என அனைவரும் வெகு ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

பயிற்சியில் சேரும்போது தட்சிணையாக வெற்றிலைபாக்குடன் 11 ரூபாய்கள் தரவேண்டும். அவ்வளவுதான்.வேறு கட்டணம் ஏதுமில்லை.
சிறார்களின் பயிற்சியை வெகுநேரம் பார்த்து வியந்தோம்.
தங்கப்பாண்டி ஏராளமான சிறார்களுக்கு கிராமியக்கலைகளைப்
பயிற்றுவித்துள்ளார்.

கிராமியக்கலை பயிலவரும் பள்ளிச்சிறுவர் சிறுமியர் பலரின் கல்விச்செலவு,தனிப்படிப்புச் செலவுகளையும் தங்கப்பாண்டியே கவனித்துக்கொள்கிறார்.

இவரின் சேவையைப் பாராட்டி இளம் சாதனையாளர் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது,ஆனந்தவிகடன்
தங்கப்பாண்டி கண் நிறைந்த கனவுகளோடு கூறியவை,
" சார்,இப்போ 150 பேர் படிக்கிறாங்க. சிலபேரு பள்ளிக்கூடப் பசங்க,
அவங்களுக்கு பாடம் படிக்கவும் டியுசன் என் செலவுலேயே ஏற்பாடு பண்றேன்,என் பிரண்ட்சா சேந்து வேலைக்குபோய் சம்பாதிக்கறதுல ஒரு பகுதிய சேத்துவச்சு ஆட்டத்துக்குத் தேவையான பொருட்களைச் செஞ்சுக்கறோம்.எனக்கு ஒரு ஆசை, எல்லாப் பசங்களையும் சேர்த்து ஒரு அரங்கேற்றம் வைக்கணும். நாங்க வேலைக்குப் போற காசுல டிரஸ்,ஆட்ட சாமான்கள் வாங்கி வச்சுட்டோம்.எல்லாப்பசங்க, இது வரைக்கும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மூத்த கலைஞருங்க எல்லாரையும் கௌரவிக்கணும். அதுக்கு சால்வை,ஷீல்டுன்னு கொஞ்சம் செலவுக்குப்பணம் சேக்கணும்."


தங்கப்பாண்டியின் ஆசைகள் தன்னலமற்றவை.
எளிய கிராமியக்கலைஞனுக்கேயுரியவை.

Tuesday 27 May 2014

பிள்ளை வளர்த்தல்


விடுமுறையின்போது பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணிக்காகச்சென்றிருந்தேன். அரசுப்பள்ளித்தலைமையாசிரியராகப் பணிபுரியும் ஒரு அம்மையார் வந்திருந்தார்.
வாங்கம்மா.எப்படி இருக்கீங்க? என்ன,இந்தப்பக்கம்?
என் பையனுக்கு டி.சி வாங்க வந்தேன்.அவன் இங்கதான் +2 படிச்சான்.
அப்படியா! எனக்குத்தெரியாதே! பரவால்லையே, மெட்ரிக்ல சேக்காம இங்க சேத்திருக்கீங்களே!
நீ,வேறப்பா, +1 அந்தப்பள்ளிகொடத்துல படிச்சான், ரெம்ப படிக்கச்சொல்லி ஸ்ட்ரிட்டா இருக்காங்கண்ணு போக மாட்டேன்னுட்டான் வந்து +2 ல சேத்தேன்.
எவ்வளவு மார்க்?
கம்மிதான்.
தம்பி என்ன பண்ணப்போற?
..........காலேஜ்.
அந்த காலேஜ் சரியில்லேன்னு சொல்றாங்களே... என்ன........,காதுல தோடு,டி சர்ட், ஜீன்ஸ் அப்படின்னு இஷ்டம்போல திரியலாம்..
அதுக்குத்தான் தம்பி அந்தக் காலேஜ் போறேன்னு அடம் பிடிக்கிறான், எங்க சொல்றத கேக்குறான்.
அந்த அம்மையார் வெகு சாதாரணமாகச் சொல்லிச்சென்றார்.
1௦ ஆம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளிவந்த மறுநாள் காலை, பால் போடும் பையனிடம் கேட்டேன்,
தம்பி, எவ்வளவு மார்க்?
437 சார்.
இந்தப்பையனின் தந்தை கண்பார்வையற்றவர்,சுயதொழில் செய்பவர்.
தனது உழைப்பில் படிக்கிறான்.
பிள்ளைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பதல்ல பெற்றோரின் வேலை.அவை வந்த வழி_வலியையும் சொல்லித்தர வேண்டும்.

Thursday 8 May 2014

ராஜீவ் காந்தி சாலை- நரகத்தின் வழி

           

விநாயக முருகனின் 'ராஜீவ் காந்தி சாலை' நாவல், காமம் சொல்லும் கதைகளுக்கே உரிய எதிர்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நாவல்.


ஒரு படைப்பாளியின்முதல் படைப்பிற்கே உரிய அனைத்து வலுவான அம்சங்களையும் உள்ளடக்கியது "ராஜீவ்காந்தி சாலை'.

ஐ.டி நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி(வீக்கம்) சமூகத்தில் ஏற்படுத்தும் எல்லாவித மாற்றங்களையும் அப்பட்டமாகப் பதிவுசெய்கிறார் விநாயக முருகன்.

ஐ.டி.நிறுவனங்களின் வளர்ச்சி மனிதரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு பெரிதாக்கியிருக்கிறது? பொருளாதாரத்தைமட்டுமேவிரும்பிய  மனிதர்கள்  தன் வாழ்வில் இழந்தவை, அழிந்த கிராமங்கள், காமம் என சகல தளங்களிலும் வீரியமுடன் பயணிக்கிறது நாவல்.


 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் இன்றைய
சூழலில் காமம் குறித்து இந்திய சமுதாயம் விவாதிக்கவேண்டியதன் அவசியத்தை இந்நாவல் வலியுறுத்துவதாகவே  நினைக்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான காட்சிகள் நாவலெங்கும் விரவியிருந்தாலும்
அன்னம்,மீன்குழம்பு சமைத்து எடுத்துக்கொண்டு செட்டியாரைப் பார்த்துவரும் ஒரு அத்தியாயம் முதுமைக்காதலையும் வாழ்வின் தேவையையும் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.

இன்றைய சமுதாயம் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நாவல் மட்டுமல்ல,நிறைய விவாதிக்கவும் வேண்டிய நிகழின் கண்ணாடி,'ராஜீவ்காந்தி சாலை'.

Wednesday 7 May 2014

Artist

   ஓவியன்

               ஓவியக்கல்லூரியில் பயிலும் இருவரின் காதலை ஓவியத்துடன் சொல்லும் படம் ஆர்டிஸ்ட்.
பெற்றோரின் எதிர்புகளை மீறி ஓவியக்கல்லூரியில் சேரும் காயத்ரி, அவளின் சீனியர் மைக்கேலின் பேச்சுக்களால் கவரப்படுகிறாள்.ஓவியக்கலை குறித்த மைக்கேலின் பார்வைகள் கயத்ரியைக் காதல் கொள்ள வைக்கின்றன.
மைக்கேலின் விருப்பப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத்தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் காயத்ரி. காதலர்கள் தனியே வசிக்கத்தொடங்குகின்றனர்.
மைக்கேல் ஓவியத்தில் சாதிக்க விரும்புகிறான். காதலனுக்காகப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள் காயத்ரி.அவளின் சம்பாத்தியத்தில் குடும்பமும் நடத்திக்கொண்டு,மைக்கேலுக்குத்தேவையான வரைபொருட்களை வாங்குவது சிரமமானதாக இருக்கிறது.
ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான்,மைக்கேல்.மருத்துவச் செலவுகளுக்குக் கல்லூரி நண்பன் அபினவ் உதவுகிறான். வாழ்க்கை மேலும் சிரமமானதாகிறது. கடுமையாக உழைக்கிறாள் காயத்ரி.கண் பார்வையற்ற நிலையிலும் மைக்கேல் ஓவியம் வரைய விரும்புகிறான்.

பல்வேறு வண்ணங்களை வாங்க இயலாத நிலையில்  காயத்ரிவருத்தப்படும்போது தன்னிடம் ஒரு பெட்டி ப்ருஷ்யன் நீலம் இருக்கிறது,அதை மைக்கேலிடம் கொடு என அபினவ் கூறுகிறான்.காயத்ரி தயங்க, மைக்கேலுக்குக் கண் தெரியாது என்பதால் கண்டுபிடிக்க இயலாது எனச் சமாதானம் சொல்கிறான். ,பிரஷ்யன் நீல வண்ணங்களை அபினவிடம்  பெற்று மைக்கேலுக்குத் தருகிறாள்,காயத்ரி..அவனும் பலவண்ணங்கள் கொண்டு வரைவதாக எண்ணிக்கொண்டு ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைகிறான்.
Dreams in Prussian Blue  என்ற தலைப்பில் ஓவியக்காட்சி தொடங்கும் வேளையில்
தனது ஆசைக்கு காயத்ரி இணங்க மறுத்ததால் ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைந்த உண்மையை அபினவ்  ,தன் மனைவிமூலம் மைக்கேலிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.
பல்வேறு வண்ணங்களை மனக்கண்ணில் கண்டு வரைந்த ஓவியங்கள் ஒரே வண்ணத்தில் இருப்பதை அறிந்து கோபம் கொள்கிறான், மைக்கேல்.
தான் ஏமாற்றப்பட்டதாக மனம் வெறுத்த மைக்கேல், காயத்ரியை தன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறான்.
மைக்கேலாக பகத் பாசில், காயத்ரியாக ஆன் அகஸ்டின் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கலைஞனாக இருந்தாலும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆணாதிக்கவாதியாக மைக்கேல்.
காலம் காலமாக தான் விரும்பியவனுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் பெண்ணாக காயத்ரி.
கலைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் வெறியை பகத் பாசில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.சாதிக்கவேண்டும் என்ற வெறியே தன்னைச்சார்ந்தவர்களை  துன்பத்திற்குள்ளாக்குகிறது என்றாலும் ஒரு கலைஞன் பலவேளைகளில் தன்னைப்பற்றிமட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.
அன்பு,அரவணைப்பிற்காக ஏங்குபவள் என்பதாலேயே எளிதில் பெண்ணைத் தன ஆசைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆண்கள் பெரும்பாலான ஆண்கள் நம்புகின்றனர். இயல்பாக அபினவின் ஆசைகளைக் காயத்ரி கடந்துசெல்லும் காட்சிகள் கவித்துவமானவை, பெண்ணின் இயலாமையையும் வெளிப்படுத்துபவை.
ஓவியக்கலையின் பரிமாணங்களை விவாதிக்கும் இப்படம் காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்துகிறது.
புதுமை பேசுபவர்களின் செயல்பாடுகளில், மன இடுக்குகளில் தேங்கிக்கிடக்கும் கசடுகளை, பழமை  முகமூடிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது  இந்த மலையாளத்திரைப்படம்.
Dreams in Prussian Blue ஆங்கில நாவலை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்  சியாமாபிரசாத்.

Tuesday 6 May 2014


விந்தைக்கலைஞனின் உருவமில்லாச்சித்திரம்....
 

எழுத்தாளர்களைப்போற்றாத சமூகம் எனப்பலரும் குறைப்பட்டுக்கொள்ளும் தமிழ்ச்சமூகத்தில் ஓவியர்களின் நிலையை எப்படி விவரிக்க முடியும்?
பல நாடுகளில், வாழும் காலத்தில் கவனிக்கப்படாத பல ஓவியர்கள் இன்று ஓவிய உலகில் நாள்தோறும் பேசப்படும் மகா கலைஞர்களாக இறவாப் புகழடைந்திருக்கிறார்கள்.
ஆனால், மூத்த குடியாகிய தமிழ் சமூகத்தில் எப்போதாவது ஓவியர்களைப்பற்றிய புத்தகங்கள் தமிழில் வெளிவருவதுண்டு.

சி.மோகனின் முதல் நாவலாக வெளிவந்து சென்ற சென்னைப்புத்தகக்கண்காட்சியில் பெரிதும் பேசப்பட்ட நாவல்,
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்.



காலத்தைத்தாண்டிச் சிந்தித்து,தன் கனவுலகில் நாயகனாக வாழ்ந்து,33 வயதில் கனவுலகிற்குப் பெயர்ந்தவர் ,ஓவியர் ராமானுஜம்.
அவரின் வாழ்க்கை பற்றிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிறப்பாக நாவலை எழுதியுள்ளார் சி.மோகன்.



பதிப்புலகம் நன்கு வளர்ந்துள்ள இன்றைய சூழலில் ஓர் உன்னத ஓவியக்கலைஞனின் வாழ்க்கைச் சித்திரம், அவன் வரைந்த ஒரு ஓவியம் கூட

இல்லாமல் வெளிவருவது,எவ்வளவு பெரிய அவமானம்!
  (அட்டைப்படம் தவிர.அதுவும் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ராமானுஜத்தின் கோட்டோவியத்துடன் கலந்து இருக்கிறது)

எழுத்தில் விவரிக்கப்பட்ட செய்திகளை எண்ணத்தில் வாங்கி, கனவில் ஓவியமாகப் பார்க்க வாசகர் என்ன, ராமானுஜமா?



ராமானுஜத்தின் சில ஓவியங்கள்,உங்களின் பார்வைக்கு.(இணையத்தில் எடுத்தவை...பதிவேற்றியவர்களுக்கு நன்றி.)
"பாரதி....கஞ்சாக் குடிக்கி" 
 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்த அறிஞர்கள் பற்றிப்பேச ஓர் சமூக சேவை நிறுவனத்தில் அழைத்திருந்தனர்.
பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர் மற்றும் குழந்தைத் தொழிலாளர் என 50பேர் கொண்ட சிறு கூட்டம்.
தமிழறிஞர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே வந்தேன்.
பாரதி,என்று ஆரம்பித்தவுடன்,.
"கஞ்சாக் குடிக்கி" என்றான் ஒரு பையன்.
திடுக்கிட்டாலும், சிரித்தபடியே கூறினேன்.
"தம்பி, நீ சொல்லியது முற்றிலும் சரியல்ல,தவறு.
பாரதி, கஞ்சாவில் தொடங்கியிருக்கலாம்,அபின் அதிகம் சாப்பிட்டவன்.ஏன் தெரியுமா?
குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து, வருந்தியவர் தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டார்.நல்லதோ,தீயதோ பழகியவற்றை மறப்பது கடினம்.
தீய பழக்கமே அவரின் உயிரைச் சீக்கிரத்தில் பறித்துக்கொண்டது.

இல்லையெனில் இன்னும் நிறைய அவரிடமிருந்து பெற்றிருப்போம்."
சரியா?
வாசிப்பு-வேள்வி 
பாடப்புத்தகத்தின் படங்களை மட்டும் நடத்திவிட்டு(?), படி என்று அமர்ந்து விடுவதல்ல மொழிப்பாட ஆசிரியரின் வேலை.
என்ன செய்யலாம்?
வாசிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாகவே சிலர் இருக்கின்றனர். பட்டப்படிப்பு முடித்தவர்களால் கூட சொந்தமாக எழுதுவது இயலாததாகவே இருக்கிறது..

முப்பருவக் கல்வியில் பல செயல்பாடுகளை ஆர்வமுடன் செய்திருந்தாலும் 9 ஆம் வகுப்பில், மூன்றாம் பருவம் முழுவதையும் வாசிப்பு,எழுதுவதற்காக ஒதுக்கினேன்.





தமிழ் பாடப்புத்தகம் மூடிவைக்கப்பட்டது.மாணவர்கள் அத்திகபட்சம் பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர், நன்கு வாசிக்க எழுதத் தெரிந்தவர் தலைவர்.
வாசிக்க எழுதத் தடையாக இருப்பவற்றை எவ்வாறு நீக்கலாம்? என்பன பற்றி விவாதிக்கப்பட்டது.

முதலில் அனைவரும் கதைப்புத்தகங்களை வாசிக்கவேண்டும், எண்ணத்தில் எழுவதை,அன்றாட நிகழ்வுகளை எழுதவண்டும். என முடிவு.

மதுரை 'புத்தகத்தூதன்' மூலம் ஓர் புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கினர்.



பாடவேளையின்போது மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினர்.
இரு மாதங்கள் முடிந்துவிட்டது.
42 மாணவர்களில் தாமாக செலவுசெய்து இது வரை புத்தகம் வாங்காதவர்கள் 8 பேர் மட்டுமே.

கிடைக்கும் பணத்தைச் சேர்த்துவைத்து வாங்கும் பழக்கம் பலருக்கும் வந்திருக்கிறது. புத்தகக் கடைகளுக்குச் சென்று கழிவும் கேட்டுப்பெறுகின்றனர்.

அன்றாட நிகழ்வுகளை எழுதுகின்றனர்.
வாசித்தவற்றை விவாதிக்கின்றனர்.விமர்சனமும் எழுதுகின்றனர்.

இப்போது மாணவர்கள் வாசித்த, வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் சில...
எஸ்.ரா வின் சிறுவர் நூல் வரிசை,சத்யஜித்ரே நூல் வரிசை,பத்தாயிரம் மைல் பயணம், போர்த்தொழில் பழகு, பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம், che வாழ்க்கை வரலாறு,பெரியார் களஞ்சியம்,மகாபாரதம்,ஹிட்லரின் வாழ்க்கை, 'ஆயிஷா' நடராஜனின் நூல்கள்.....

"நான்" --"நாங்கள்"

பெரும்பாலானோருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

நாம் கட்டும் கட்டிடத்தில் நாள் முழுவதும் உழைக்கும் கட்டிடத்தொழிலாளி, மதிய வேளையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தால்,"சம்பளம் வாங்கிக்கொண்டு எப்படித்தூங்குகிறார்கள்?" என்று ஒப்பாரி வைக்கிறோம்.
"என்னத்தக் கிழிக்குரானுக ,இவ்வளவு சம்பளம்...!" எனப் பொது மக்கள் பேசும்போது எவ்வளவு கோபப்படுகிறோம்?
உடல் உழைப்பு...அறிவு உழைப்பு என வார்த்தைவிளையாடித்தப்பித்துக் கொள்கிறோம்.நமக்குக் கொடுப்பவர்கள்,நம்மிடம் நுகர்பவர்கள் கேள்வி கேட்பதில்லை.
முதல் வகுப்பில் சேரும்போது இருந்தது போலவே பத்தாம் வகுப்பில் எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் மாணவர்கள் இருப்பதற்கு யார் காரணம்? 10 ஆண்டுகள் படம் நடத்திய(?) ஆசிரியர்கள் தானே!
அதற்கு இணையான ஊதிய விகிதம்...எனப்பலவாறு கோரிக்கைகள் எழுப்புகிறோமே.....தனியாருக்கு நிகரான தரத்தில் கல்வி என முயன்றிருக்கிறோமா?
ஆசிரியர்களுக்கு எதிரான பொதுக் கேள்விகள் எழும்போது "நான் அப்படியில்லை" என ஆங்காங்கே சிலர் எழுகின்றனர்.
"நான்" --"நாங்கள்" ஆகும்போது கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படும்.

பொதுத்தேர்வு

1௦ ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.

அறைக்கண்காணிப்பாளர் பணி. தமிழ்த்தேர்வுக்குச் சென்றிருந்தேன். ஓர் மாநகராட்சிப்பள்ளியைச் சாந்த எட்டு மாணவர்களில் ஒருவர் வரவில்லை. மற்றவர்களிடம் விசாரித்தேன்."நீண்ட நாட்களாகப்பள்ளிக்கு வரவில்லை" என்றனர். நேற்று அந்த அறையைக்கடக்கும்போது பார்த்தேன்.எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.
புதிதாக வந்திருந்த மாணவனிடம் கேட்டேன்,
"ஏன், முந்தைய தேர்வுகளை எழுதவில்லை?"
"நான் பாசாக மாட்டேன்னு எங்க ஸ்கூல் சார் எழுத வேணாம்னு சொல்லிட்டாரு"
"ஏம்பா, எழுதி ஒருவேளை நீ பாஸாயிட்டா?"
"இல்ல, ஒரு தடவைகூட நான் பாசாகல"
" அதனால என்ன, எப்படின்னாலும் அடுத்தமுறை எழுதப்போற, இப்பவும் எழுதிப் பாத்திருக்கலாம்ல!"
"ஹால் டிக்கெட் தரமாட்டேன்னு சார் சொல்லிட்டாரு,"
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
அந்த அறையிலிருந்த ஆசிரியை கூறினார்," சார், எட்டு பேர்தான் இருக்காங்க. ஒருத்தன் பெயிலாயிட்டாலும் பர்சென்டேஜ் குறைஞ்சிடும், அப்புறம் எல்லாரிடமும் பேச்சு வாங்கணும், பையன் ஆப்சென்ட் ஆனா ஒண்ணுமில்ல,"
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்ன மாதிரியான பணி இது?
ஒரு பள்ளியை, தேர்ச்சி சதவீதத்தை வைத்து எடை போடுவதால் எவ்வளவு இழப்புகள்?
சிறார்களின் வாழ்க்கையோடு இன்னும் எத்தனைகாலம்தான் விளையாடப் போகிறோம்?
எப்போது விடியும்?
ஒற்றை ரோஜா.

தலையில் ஒற்றை ரோஜாவுடன் யாரைப்பார்த்தாலும் எனக்கு டீச்சர் ஞாபகம்தான் வரும்.
சார்,எங்கள் குடும்ப நண்பர்.அவர்களுக்கு இரு பையன்கள். அவர்கள் என் பெற்றோரை மாமா,அத்தை என அழைத்தாலும் நாங்கள் சார்,டீச்சர் என்றே அழைப்போம்.
ீச்சர் நல்ல கருப்பு. எப்போது பாத்தாலும் காதுக்குப்பின் ஒரு ஒற்றை ரோஜா செருகியிருக்கும்.
டீச்சர் என்றாலே எனக்கு அந்த ரோஜாதான் ஞாபகம் வரும்.


வளர்ந்தபின்தான் தெரிந்துகொண்டேன், சார் தனியே வேறு வீட்டில் இருக்கிறார் என்று. ஆனால், வேறு குடும்பம் இல்லை.
எனது திருமணத்துக்குப்பின் தனிக்குடித்தனம் செல்ல வீடு பார்க்க ஆரம்பித்தபோது, டீச்சர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இடத்தைத் தந்தார்கள்.
மரங்களடர்ந்த இடத்தின் நடுவே ஒரு ஓட்டுவீடு. பல ஆண்டுகளுக்குப் பின்பே அதை இடித்துவிட்டு மாடிவீடு கட்டினேன்.
நாங்கள் வாங்கியபின்பும் மரங்களில் விளையும் பழங்களை டீச்சர்தான் பறித்துக்கொள்வார்கள். 'இருவர்தானே' என்று சொல்லியபடி எங்களுக்குச் சிலவற்றைத் தருவார்கள்.
என் மனைவியும் டீச்சரும் நீண்டநேரம் பேசிக்கொள்வார்கள்.
வழக்கமான பக்கத்துவீட்டுப் பரிமாற்றங்களும் நடைபெறும்.
"உனக்கு மாமியார் அருகில் இல்லாத குறை, டீச்சரால் தீர்ந்தது" என்பேன், மனைவியிடம்.
நான் பள்ளி முடிந்ததும் பெரும்பாலும் நண்பர்கள்,ஓவியர்களைப் பார்த்துவிட்டு 7 அல்லது 8 மணிக்கு வீடு திரும்புவேன்.டீச்சர் நின்று கொண்டிருந்தால் ஒரு புன்னகை. சிரித்துக்கொண்டே கேட்பார்கள்,"என்ன, ஸ்கூல் முடிஞ்சு சீக்கிரம் வந்துட்ட".
சிரித்துக்கொண்டே சென்றுவிடுவேன்.
டீச்சர் மகன்களுக்குத் திருமணம் ஆனது.பெரியவன் டீச்சருடன்,இளையவன் அமெரிக்காவில்.
சார் அவ்வப்போது வருவார்.டீச்சரும் அங்கு செல்வார்கள்.
பணி ஓய்வுக்குப்பின் வீட்டையும் இரண்டு பேத்திகளையும் கவனிப்பதே டீச்சரின் முழு நேரப்பணியானது.
"டீச்சர் எப்போதும் ஒற்றை ரோஜா வைத்திருப்பார்கள், எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?" என்று என் மனைவியிடம் சொல்வேன். அதை அவள் ஒரு நாள் டீச்சரிடம் சொல்லியிருக்கிறாள்.
சிரித்துக்கொண்டே," அமுக்குணிப்பய, தலையக் குனிஞ்சுக்கிட்டே நடப்பான்,பிசாவும் மாட்டான்,ஆனா,ரோஜாவப்பாத்து ரசிக்கிறான்" என்று சொன்னதாகச் சொன்னாள்.
விளையாட்டு ஆசிரியை என்பதால் நல்ல ஆரோக்கியம்.அவ்வப்போது மலை நேரம் என் மனைவியும் டீச்சருடன் நடைப்பயிற்சி செல்வதுண்டு.
இரவு 1௦ மணிக்கு மேல் என் அப்பா போன் செய்தார்.
பக்கத்து வீட்டுல இருக்க,உனக்கு விஷயம் தெரியாதா?
என்ன?
டீச்சருக்கு அட்டாக், ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க.சீரியஸ்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.தேர்தல் வகுப்பிற்கு சென்று வந்தபின் இருவரும் வெளியே செல்லவில்லை.
மறுநாள் காலையே என் மனைவி மருத்துவமனை சென்றாள்.
டீச்சருக்கு அட்டாக் இல்ல, புட் பாய்சன்னு சொல்றாங்க,இல்ல,எதுவும் அவங்களே சாப்பிட்டிருப்பாங்கன்னும் சொல்றாங்க. அழுகையுடன் போன் செய்தாள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.விடைத்தாள் திருத்தும் பணி முடிந்ததும் மருத்துவமனை சென்றேன்.
டீச்சரின் உடல் நிலை அப்படியே இருக்கிறது. அமெரிக்க மகன் வந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்.
உள்ளே சென்று பார்த்தேன். வாயில்குழாய்கள், சுற்றிலும் உபகரணங்கள்.
ஒரு குழந்தை போலக் கண்மூடியபடி, டீச்சர்.
வீடு வந்ததும் ஏதேதோ சொன்னாள் மனைவி.
முதுமையில் கொடுமை தனிமை.
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
வீடு திரும்பும்போது சிரிப்பு கலந்த கணீர்க்குரல் கேட்கும்.
"என்ன சீக்கிரம் வந்துட்ட"

மதுரை... ஒரு பாடம்.


மதுரை... ஒரு பாடம்.
  7 ஆம் வகுப்பிற்கு மதுரை மாநகரைப்பற்றியபாடம்.
மதுரையில் இருந்துகொண்டு ஏன் பாடத்தை வகுப்பறைக்குள்ளே மட்டும் படிக்கவேண்டும்?
மாணவர்களை நகருக்குள் அழைத்துச்செல்ல முடிவெடுத்தோம்.
முன்தயாரிப்பாக,
மதுரை பற்றிய ஆவணப்படம் காட்டப்பட்டது.


மதுரை நகர் பற்றிப் பாடம் கூறும் கருத்துக்களை குழுக்களாகப் பிரிந்து விவாதித்த மாணவர்கள் குறு நாடகங்களாக நடித்துக்காட்டினர்.
தமிழாசிரியர்களுடன் சில பயிற்சியாசிரியர்களும் துணைவர மாணவர்கள் இருவர் இருவராக நடக்கத்தொடங்கினர்.
மதுரைக்கோட்டையின் கிழக்கு நுழைவாயில்.
முனியாண்டி கோவில்
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்,
வடம்போக்கித்தெருக்கள்
புதுமண்டபம்
நகரா மண்டபம்
விட்டவாசல்
தேர்








நகரின் முதல் காவல் நிலையம்
விளக்குத்தூண்
பத்து தூண்கள்
வழியே நடந்து திருமலை நாயக்கர் மகாலை அடைந்தோம்.
ஒவ்வோரிடத்திலும் அதுகுறித்த வரலாறு சொல்லப்பட்டது.
மகாலில்,
வினாடிவினா, ஓவியம்,பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அங்கிருந்து பேருந்தில் பள்ளி திரும்பினோம்.

மகாலின் பெருமைமிகு தூண்களில் படித்தவர்களே பெரும்பாலும் தங்களின் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்துகின்றனர்.
பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப்பாழ்படுத்துவோரைக்கண்டிக்க என்ன செய்யலாம்?
சேட்டைக்காரர்கள் எனப்பெயரெடுத்த சில மாணவர்களை அழைத்து,
யாரேனும் தூண்களில் கிறுக்கினால் சுற்றிநின்று 'தூணில் கிறுக்காதீர்கள்,பாரம்பரியத்தை அவமதிக்காதீர்கள்' என்று உரக்கச் சத்தமிடுமாறு கூறினோம்.
பள்ளி திரும்பும்வரை அம்மாணவர்கள் மகாலின் தூண்களைப் பாதுகாத்தது மறக்கவியலா நினைவு.
அலை வாழ்க்கை 
Breaking the Waves படத்தைப்பற்றி முகநூல் மூலமே அறிந்தேன்.
உடனே படத்தைப்பார்த்துவிட வேண்டுமென மனம் துடித்தது.


டென்மார்க் நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெஸ் என்ற பெண்ணே முக்கிய பாத்திரம்.
கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் கட்டுப்பாடான கிராமம். பெஸ், இறை நம்பிக்கை மிகவும் உடையவள்.குழந்தை உள்ளம் படைத்தவள். இயான் என்பவரை மணக்கிறாள். கணவரை உயிராக நேசிக்கிறாள்.
என்னை நிறுவனத்தில் வேலைசெய்யும் இயான் ஒரு விபத்தில் சிக்கி உடல் செயல்பாட்டை இழந்து படுத்த படுக்கையாகிறார்.
'இனி என்னால் பயனில்லை,வேறு திருமணம் செய்துகொள்' என இயான் சொல்ல, மறுக்கும் பெஸ் தனது காதல் இயானைக்குணப்படுத்தும் என நம்புகிறாள்.


இயானுக்கு விபரீத ஆசை ஒன்று தோன்றுகிறது,
பெஸ்,வேறு ஆணுடன் உறவுகொண்டு அதைத் தன்னிடம் கூறவேண்டும்.
அதிர்ச்சியடையும் பெஸ், கணவன் மீது கொண்ட காதலால் அவனின் ஆசையை நிறைவேற்றத்தொடங்குகிறாள்.
ஊர் பழிக்கிறது.பெஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடவுளோடு பேசுவதாக நம்பி எப்போதும் போல அவளே கடவுளாகவும் பேசிக்கொள்கிறாள்.இயேசு அவளுடனே இருப்பதாக ஆணித்தரமாக நம்புகிறாள்.
இயான் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவரின் வார்த்தைகளை நம்ப மறுக்கும் பெஸ் இயான் எழுந்து நடமாடுவார் என நம்புகிறாள்.
அதிர்ச்சிகரமான இறுதிக்கட்டத்தில் பெஸ் இறக்கிறாள்,
இயான் பிழைக்கிறார்.


பெஸ்,பாவி.எனவே இறுதிச்சடங்குகள் செய்யாமல் புதைத்துவிட வேண்டுமென ஆலயத்தில் முடிவுசெய்கின்றனர்.
நண்பர்கள் உதவியுடன் பெஸ் உடலை கடலுக்குள் எடுத்துச்சென்று ஜல சமாதியாக்குகிறார் இயான்.
அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வானிலிருந்து மணியோசை கேட்கிறது.
இரண்டரை மணிநேரம் ஓடும் இப்படம் முழுவதும் பெஸ் ஆக நடித்திருக்கும்  Emma Watson நம் மனதில் நிறைகிறார். கடவுளுடன் பேசும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. ஒரு குழந்தைபோல படம் முழுவதும் நம்மையும் அவருடன் அழைத்துச்செல்கிறார்.
காதல்,அன்பு, நம்பிக்கையின் வலிமையை எளிமையாகக் கூறியதிலேயே இப்படம் வெற்றியடைகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் வானிலிருந்து மணி ஒலிப்பது,பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றபோதும் நம் மனம் நம்புகிறது என்பதே இப்படத்தின் வெற்றி.
இயான்,தன் மனைவியிடம் வேறு திருமணம் செய்துகொள் எனச் சொல்லும்போது ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் இறுதிக்காட்சி என் மனதில் நிழலாடியது.