Sunday 17 February 2013

விஸ்வரூபம்


விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த கூத்துக்கள் என்னைச்சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தன.
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு குப்பைப்படங்களின் மீது வழக்குகள் போடப்போட என் மனம் இன்பத்தில் துள்ளியது.
தமிழ் திரைப்படங்கள் எந்தவகையுள்ளும் அடங்காத குப்பைகள். அவ்வப்போது ஏதேனும் நம்பிக்கை தோன்றினாலும் சாக்கடை.
இதைச் சுத்தம் செய்யவே முடியாது என்று நம்பிக்கை இழந்திருந்த வேளையில், விஸ்வரூபம் விவகாரம் அதைத்துளிர்க்கச் செய்திருக்கிறது.

மத அடிப்படைவாதிகளைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள்,எங்கள் சாதிக்காரர் ஹீரோவாக மட்டுமே காட்டப்படவேண்டும்,
வில்லனாகக் காட்டினால் வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டலாம்.
வில்லனின் சாதி அடையாளங்களை மறைக்க , அவரின் முகத்தையே காட்டாமலிருக்கலாம்.  ஆண்கள் சங்கத்தினர் , ஆணை வில்லனாகக்  காட்டுவதை எதிர்க்கலாம். இதைப்போலவே பெண்களும் அரவாணிகளும் எதிர்த்தால் வில்லன் அரூப நிலை அடையலாம்.
பேய்கள் வழக்கு தொடரப்போவதில்லை.
விலங்குகளுக்கு ஏற்கனவே தடை.
வில்லன் தமிழில் பேசுவதால், மொழியை அவமதிப்பதாக தமிழறிஞர்கள் எதிர்ப்பார். வில்லனின் மொழியும் மறையும்.
இப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தால் எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தபடி படம் எடுத்து, அனைத்து தரப்பினருக்கும் போட்டுக்காட்டி ஒப்புதலுக்குப்பின்  வெளியிடலாம்.
திரையரங்குகள் காத்தாடினால் வழக்கம்போல ஷாப்பிங் மால்கள்,திருமண மண்டபங்கள் கட்டினால் ....மாலில் கடலைபோட்டு மண்டபத்தில் மாலை மாற்றி பல்கிப்பெருகும் தமிழினம்.

திடீரென உருவம், வசனம் என எதுவுமில்லாத புதுமைகள் வரலாம்.எப்படியோ, விரைவில் தமிழ்த்  திரை உலகம் பல புதுமைகளைத் தரப்போகிறது எனத் தோன்றுகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை.