Sunday 18 November 2012

துடைத்துக்கொண்டு போய்ச் சேர்

சமயம், தத்துவத்தில் தேடல் உள்ளவர்கள் ஜென்னை நன்கு அறிவார்கள். உண்மை எளிமையானது. விளக்கங்கள் கடுமையானவை. ஜென் கவிதைகள், எளிமைக்குள் பிரபஞ்ச,மானுட ரகசியங்களை உள்ளடக்கியவை.
தமிழில் ஜென் கவிதைகள் குறித்த புத்தகங்களில் சிறந்தது  2003 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட 'பெயரற்ற யாத்ரீகன்'. ஆகச் சிறந்த ஜென் கவிதைகளை மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடனும் வழங்கியிருப்பவர் யுவன் சந்திரசேகர்.
அத்தனை கவிதைகளும் எண்ணங்களைத் துளியிலிருந்து கடலாக விரிப்பவை. எனக்கு மிகவும் பிடித்த பலவற்றுள் ஜென் முழுமையையும் எளிமையாய் விளக்கியது 'க்கோ உன்' எழுதிய கவிதை. இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. கவிதையை உணர்வோம்.

சாமியார் ஜாங் க்கு - ஸோங் சுறுசுறுப்பாய்
மலங்கழிப்பதில்
ஈடுபட்டிருந்தபோது, தவளைகளின் சப்தத்தைக்
கேட்டார். உந்துதலுற்று,
இசைக்கத் தொடங்கினார்.

வசந்தத்தின் தொடக்கத்தில், நிலவெரியும் இரவுகளில்
தவளைகளின் சப்தம் உலகத்தைத்
துளைக்கிறது.
ஒரு துருவத்திலிருந்து மறு துருவம் வரை.
நம் அனைவரையும்
ஒரே குடும்பமென உணரவைக்கிறது.

இதோ பார்,
மலம் கழித்து முடித்துவிட்டால்
துடைத்துக்கொண்டு
போய்ச் சேர்.


எவ்வளவு எளிமையான வரிகள். சாமியார் மலம் கழிக்கும்போது கூட இயற்கையை ரசித்துப் பாடுகிறார்.
தவளையின் சப்தம் உலகையே ஒரே குடும்பமாக உணர வைப்பதாக ஆச்சரியப்படுகிறார். உண்மையான துறவிகளுக்கு அனைத்தும் ஒன்று. காக்கை, குருவி, கடல், மலை அனைத்தையும் ஒன்றாகப் பார்த்த பாரதி போல.
இப்படி எண்ணி எண்ணி வியக்கும் வேளையில் தொடரும் வரிகளே ஜென்னை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றன. பார்வையின் புதிய பரிமாணத்தையும்.
நீ எதற்காக வந்தாய்? மலம் கழிக்க. அதை முடித்துவிட்டால் கழுவிக்கொண்டு போய்ச் சேர்.
வந்த வேலையை மறந்துவிட்டுத் தத்துவம் பேசினாலும் பயனில்லை. இப்போது என்ன செய்கிறாயோ அதில் மட்டுமே முழு கவனத்தையும் வை  என்பதே  ஜென். எளிமையாகத் தோன்றினாலும் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியவுடனேயே மனம் அலைபாய்வதை உணரவோ, நிறுத்தவோ முடிவதில்லை. அப்போது அதில் மட்டுமே இருப்பதே தியானம். வாழ்வின் தரிசனம்.
எனது கழிப்பறைக் கதவில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை. தினமும் வாசிக்கிறேன். எண்ணங்கள் கவிதையில், மற்றதில் அலைபாயும்போது முகத்தில் அறைகிறது,
 துடைத்துக்கொண்டு போய்ச் சேர்,
தினமும்.

No comments:

Post a Comment